
ஒபாமாவின் வெற்றியை கறுப்பின மக்கள் ஆனந்த கண்ணீரோடு கொண்டாடியதை தொலைக்காட்சியில் பார்த்தோம். நூற்றியைம்பது ஆண்டுகளுக்கு முன் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டாலும், பல ஆண்டுகள் இனவெறி தாக்குதல்களுக்கு ஆட்பட்டு, பல தலைமுறைகளாக சம உரிமைக்காக போராடி, இன்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தல் முடிவு அமெரிக்காவில் சாத்தியமாகியிருக்கிறது. ஒபாமாவின் வெற்றி செய்தியை கேட்க சிகாகோ கிராண்ட் பார்க்கில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நடுவில் கண்களில் கண்ணீரோடு சிவில் உரிமை போராளிகள் அந்த வெற்றியை கொண்டாடியது மிகவும் நெகிழ்ச்சியானது.
ஒபாமாவை பெரும்பான்மையான வெள்ளை மற்றும் லத்தீன் அமெரிக்க (ஹிஸ்பானிக்) இனத்தவரும் தேர்ந்தெடுத் திருப்பது மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரே சமூகத்தில் வாழ்ந்தாலும் ஒருவகை இன வேறுபாட்டு சிந்தனையோடு வாழ்ந்து வந்த இந்த மக்களை பிணைக்கும் சக்தியாக ஒபாமா மாறியிருப்பது கவனிக்கத்தக்கது....
நான்கு வருடங்களுக்கு முன் இலினாய் செனட்டராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் இந்த ஜனாதிபதி போட்டியில் இடம்பெறுவாரா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.
இந்த வெற்றிக்கு புஷ் மேலிருந்த வெறுப்பும், சாதாரண அமெரிக்க குடிமகன் இன்று சந்திக்கும் பொருளாதார பிரச்சினைகளும் ஒரு காரணம்தான்.
அதே சமயம், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இந்தியாவில் எப்படி ஜாதி பாகுபாடுகள் இன்றும் நீடிக்கின்றனவோ அதே மாதிரி, அமெரிக்காவிலும் இன வெறிக்கொள்கையாளர்கள் இன்றும் மிக அதிகமாகவே இருக்கின்றனர். அதையும் தாண்டி ஒபாமா வெற்றி பெற்றதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
முதலில், ஒபாமா போர் நிறுத்தம் செய்து, இராக்கிலிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறப்போவதாக அறிவித்தது.
இரண்டாவது காரணம், ஒபாமாவின் மிகவும் சாணக்கியத்தனமான பிரச்சார வியூகங்கள், மற்றும் தனக்கான வாக்கு வங்கியை ஏற்கனவே இருக்கும் பிற வாக்கு வங்கிகளிலிருந்து பிரிப்பதில் அதிக நேரம் செலவிடாமல், தனக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கியது. அதாவது, வழக்கமாக ஓட்டுச்சாவடிகளுக்கு செல்லாத பெரும்பான்மை ஜனநாயக கட்சி ஆதரவாளர்களை ஓட்டுப்போட வைத்தது, இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள், பெண்கள் போன்றவர்களை தன் பக்கம் ஈர்த்தது, யார் என்ன திசைத்திருப்பினாலும், அழுத்தம் திருத்தமாக அமெரிக்காவின் பொருளாதார பிரச்சனையை முன்வைத்தே பிரச்சாரம் செய்தது போன்ற நடவடிக்கைகள் அவரது வெற்றியை உறுதிப்படுத்தின.
மூன்றாவது காரணம், அமெரிக்க சரித்திரத்தில் 1970 களின் ஆரம்ப காலத்திற்கு பிறகு இந்த தேர்தலில்தான் மக்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று தங்களது ஓட்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் பதியப்பட வேண்டும் என்று விரும்பி தவறாமல் ஓட்டு போட்டது....வழக்கமாக 30% வாக்குகள் பதிவாகும் இடங்களில்கூட இந்த முறை 80% வாக்குகள் பதிந்தாக செய்திகள் கூறுகின்றன. இந்த அளவிற்கு வாக்கு பதிவு முந்தைய தேர்தல்களில் இருந்திருந்தால் அமெரிக்க 8 வருடங்கள் கஷ்டப்பட்டிருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டிருக்காது என்பது பலரது கருத்து !!!!!!
லிண்டன் ஜான்சனிற்கு பிறகு அமெரிக்க காங்கிரசிலும் மிகப்பெரிய பலத்தோடு பதவிக்கு வந்திருக்கும் ஜனாதிபதி ஒபாமா தான். இந்த வெற்றியை விட, இனிமேல் ஒபாமா செயல்பட போகும் விதம்தான் மிகவும் முக்கியமானது. அவரது ஒவ்வொரு செயலும் அமெரிக்காவில் வாழும் ஓட்டு மொத்த கறுப்பின மக்களின் செயல்திறனோடு ஒப்பு நோக்கப்படும். ஒபாமா இனி மீடியாவின் மைக்ரோ ஸ்கோப் பார்வையின் கீழ் வைக்கப்பட்டு, விமர்சிக்கப்படுவார்....இதை ஒபாமா எப்படி எதிர் கொள்வார், அமெரிக்கா இன வேறுபாடுகளை கடந்து சமமான வாய்ப்புகளை அனைவருக்கும் வழங்கக்கூடிய தேசம் என்பதை அமெரிக்க மக்கள் தங்களது ஓட்டுக்கள் மூலம் நிரூபித்துவிட்டனர். கொடுக்கப்பட்ட வாய்ப்பை எப்படி ஒபாமா பயன்படுத்தப்போகிறார் என்பதுதான் இப்போது உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் !!!!!
தனது அபரிமிதமான வெற்றியின் மூலம் சரித்திரம் படைத்த ஒபாமா அந்த வெற்றியை தனது செயல்திறனால் தக்கவைத்துக் கொள்வதிலும் சரித்திரம் படைப்பாரா என்பது ரொம்ப ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம்.....










